நொடிக்கு நொடி வாக்கு எண்ணிக்கை அப்டேட்! தேர்தல் ஆணையம் சூப்பர் ஏற்பாடு! எப்படி பார்ப்பது தெரியுமா?
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிய பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்காக பிரத்யேக இணையதள முகவரியும், செல்போன் செயலிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 85 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்ற மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. சில தொகுதிகளில் 90 சதவீதத்தைத் தாண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டும் அல்லாமல், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் வெளியிடப்படுகின்றன.
அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கணக்கெடுப்பு தொடங்கும். முதல் சுற்று முடிவுகள் வெளியாகும் தருணத்திலிருந்தே அரசியல் சூழல் சூடுபிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை மக்கள் எளிதாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனிப்பட்ட இணையதள வசதியை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சுற்று வாரியாக புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான இணையதளத்தில், எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளார், வாக்கு வித்தியாசம் என்ன, எந்த கட்டத்தில் யார் முன்னிலை பிடித்துள்ளார் போன்ற தகவல்கள் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்படும். இதனால், மக்கள் நேரடியாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், வீட்டிலிருந்தபடியே அல்லது கைப்பேசியிலிருந்தே முழு தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செல்பேசி செயலிகளின் மூலமும் இந்த தகவல்களை உடனுக்குடன் பார்க்க முடியும். வாக்காளர் உதவி செயலி மற்றும் மற்ற சேவைகள் மூலம் கூட நிலவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தேர்தல் அதிகாரிகள் வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல்களே இணையதளம் மற்றும் செயலிகளில் நேரடியாக பதிவேற்றப்படும்.
இதனால் தவறான தகவல்கள் பரவுவதற்கான வாய்ப்பு குறையும். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே மக்கள் பார்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை அறிய இந்த முறை முழுமையான டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களது தொகுதி நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications