100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தகவல்.. மின்சார வாரியம் விளக்கம்
சென்னை: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் உண்மையில் வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் பணி நடக்கிறது.
தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் மீண்டும் பரவி வருகிறது. இததனை திட்டவட்டமாக மறுத்த மின்சார வாரியம். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அதாவது தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கான கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது என்றும் இதன்படி ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் செய்யும் புதிய நடைமுறை சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதேபோல வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேநேரம் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது. மின்சார இழப்பை தடுக்க 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உளளதாக சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்துள்ள மின்சார வாரியம், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றுகோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக இதேபோன்று ஒரு முறை கடந்த மே மாதம் வதந்தி பரவியது. அப்போதும் மின்சார வாரியம் விளக்கம் அளித்தது. அதன்படி, "சமூக வலைதளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால், மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications