100 நாள் வேலை திட்ட விவகாரம்: அரைவேக்காட்டுத்தனமான சீமான் பேச்சு- விவசாய சங்க செயலாளர் சண்முகம்
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது அரைவேக்காட்டுத்தனமானது என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளேட்டில் பெ.சண்முகம் எழுதிய கட்டுரை: "விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டு மென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும்" - இது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் கண்டுபிடிப்பு. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் இதை முன்னிறுத்தி அவர் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார்கள். இந்திய ஒன்றிய பாஜக அரசாங்கமும் நூறுநாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தோடு தான் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரே அரசு திட்டம் இதுதான். பல கோடிக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் ஒரே திட்டமும் இதுதான். இத்திட்டத்திற்கு எதிராக முதலில் நிலவுடமையாளர்கள் பேசினார்கள். பிறகு மத்திய அமைச்சர்கள் பேசினார்கள். இப்போது சீமான் போன்றவர்கள் பேசுகிறார்கள்.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், சிறு-குறு விவசாய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தான் ஏறத்தாழ 80 சதம் ஈடுபடு கிறார்கள். ஓரளவு வயதானவர்கள். விதவைகள், குடும்பத்தினரின் ஆதரவை இழந்தவர்கள் சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் உழைத்து வாழ்வதற்கான திட்டமாக இது விளங்குகிறது. நீர்நிலை பராமரிப்பு, மரக்கன்றுகளை நட்டுவளர்த்தல், கிராமப்புற சாலைகள் அமைத்தல், அரசின் நிதிஉதவியுடன் கூடிய கட்டுமானங்கள், கழிப்பறைகள் என இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் இத்திட்டப் பயனாளிகள் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

சீமான் பேச்சுக்கு 2 காரணங்கள்
இந்த திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று சீமான் சொல்வதற்கான காரணம் : 1. இதனால் தான் விவசாய வேலைக்கு ஆள்கிடைக்கவில்லை. 2. மக்களை சோம்பேறியாக்குகிறது. 3. வேலை செய்யாமல் இவர்கள் நிழலில் அமர்ந்து வெட்டிக்கதை பேசி விளை யாடிக் கொண்டிருக்கிறார்கள். - இப்படியாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற குறளுக்கொப்ப இவர் சொல்வது சரியா? உண்மை நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

அரைவேக்காட்டுத் தனம்
ஒரு குடும்பத்திற்கு நூறுநாள் வேலை உத்தர வாதம் என்பது தான் 'மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்'. குடும்பத்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர் என்றாலும் தலா 50 நாட்கள். தமிழ்நாட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்த துவங்கிய காலத்திலிருந்து இதுவரை 100 நாள் வேலை வழங்கிய வரலாறே இல்லை. அதிகபட்சம் 57 நாட்கள் தான் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் சராசரியாக வருடத்திற்கு 25 முதல் 30 நாட்கள் தான் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வேலை கிடைக்கிறது. எனவே, வருடத்தில் ஒருவருக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தில் 25 நாட்கள்; விவசாயத்தில் 30 நாட்கள் ஆக 55 நாட்கள் தான் வேலை. இன்னும் தாராளமாக 65 நாட்கள் கூட வைத்துக் கொள்ளுங்கள். மீதி முந்நூறு நாட்கள் விவசாய தொழிலாளர்கள் என்ன வேலைக்கு செல்கிறார்கள். எப்படி வாழ்கிறார்கள்? ஆகவே, விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை என்பது உண்மையல்ல. விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு காரணம் 100 நாள் வேலை திட்டம் என்பது அரைவேக்காட்டுத்தனமான கருத்தாகும்.

விவசாயிகளை சோம்பேறிகள் என்பதா?
இத்திட்டத்தில், செயல்படுத்துவதில் குறைபாடுகள் இருக்கிறதென்றால் அதை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்யக்கோருவது தான் நியாயமாக இருக்க முடியும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றிலடிக்கும் வகையில் திட்டத்தையே ஒழிக்க வேண்டுமென்று கோருவது என்ன வகையான மனநிலை? விவசாயம் தற்போது இயந்திரமயமாகிவிட்டது. விதைப்பு முதல் அறுவடைக்குப் பிந்தைய பணி வரை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. களையெடுப்புக்கு பதிலாக இப்போது களைக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு பன்னாட்டு கம்பெனிகள் ஆதிக்கம் விவசாயத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. இதனால் விவசாய தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடியும், இடம்பெயர்ந்தும் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை. ஆனால் கடினமாக உழைக்கும் விவசாயத் தொழிலாளர்களை பார்த்து "சோம்பேறிகள்" என்று முத்திரை குத்தியது சீமானாகத்தான் இருக்கும்.

ஓய்வெடுப்பது மோசமா?
இதே விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்கோ, இதர பணிகளுக்கோ செல்லும் போது சோம்பேறியாக இருக்கிறார்கள் என்று யாரும் சொல்வது இல்லை. ஏனென்றால் வேலை வழங்குபவர் அருகிலிருந்து வேலையை கொடுக்கிறார். மேற்பார்வையிடுகிறார். 100 நாள் வேலைத்திட்டத்திலும் திட்டப்பணியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் அருகில் இருந்து வேலை வாங்கினால் அவர்கள் சுணக்கமாக இருப்பதற்கான வாய்ப்பிருக்கப் போவதில்லை. ஓய்வு நேரத்தில் நிழலில் உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும் உங்கள் கண்களை உறுத்தும் அளவுக்கு மோசமான செயலல்ல.

என்ன காரணம்?
சீமான் போன்றவர்களின் இத்தகைய பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல! மாறாக, இவ்வளவு காலமும் ஆண்டைகளை அண்டிப்பிழைத்துக் கொண்டிருந்த மக்கள் சுயேச்சையாக வேறு வேலை செய்து பிழைப்பதும், சுதந்திரமாக வாழ்கிறார்களே என்ற மேலாதிக்க குணம் கொண்டவர்களின் வயிற்றெரிச்சல் தான் காரணம். இளைய தலைமுறையினர் சாதியரீதியான ஒடுக்குமுறை, பாகுபாடு காரணமாகவே விவசாய பணிகளுக்கு வர விரும்புவதில்லை. இந்த சூழ்நிலைகள் குறித்த எந்த புரிதலும் இல்லாமல், வாய்க்கு வந்ததை பேசி வரும் வழக்கத்தில் தான் 100 நாள் திட்டத்தை ஒழிக்க வேண்டுமென்றும் சீமான் பேசியிருக்கிறார். உண்மையிலேயே விவசாயத்தைக் காப்பாற்று வதும் விவசாயிகளை முன்னேற்றுவதும் சீமானின் நோக்கம் என்றால், அவர் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களுக்கு அரசு லாபகரமான விலை தீர்மானிக்க வேண்டும். அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்வதற்கான தொழில்நுட்ப உதவி, சந்தை வாய்ப்புகளை உருவாக்கி தருவது, சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்குகள், தரமான இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்குவது, மும்முனை மின்சாரம் வழங்குவது, விவசாயத்திற்கு மின்இணைப்புக்கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கு, மத்திய - மாநில அரசுகள் விவசாயத் திற்கான பொது முதலீட்டை அதிகரிக்ககோருவது, பாசன திட்டங்களைப் பரவலாக்குவது உள்ளிட்டவை களாகத்தான் இருக்க முடியும். மாறாக, விவசாயத்தைக் காப்பாற்ற நூறுநாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பது சிறுபிள்ளை தனமானதும், போகாத ஊருக்கு வழி சொல்வதுமாகும்.

உறவாடிக் கெடுப்பது
இந்திய விவசாயத்தையே விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்க சட்டமியற்றி சதியில் ஈடுபட்டிருக்கிறது பாஜக அரசு. விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்களின் நலன்களை காப்பதற்காக விவசாயி களை காவு கொடுக்கிறது பாஜக அரசு. விவ சாயத்தைக் காப்பதுதான் சீமானின் நோக்கமென்றால் முதலில் ஒழிக்க வேண்டியது மோடி ஆட்சி என்று தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். நீடித்து நடை பெற்று வரும் நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தை உதட்டளவில் கூட ஆதரிக்காத நபர் விவசாயத்தைக் காப்பாற்றப் போகிறாராம். கேழ்வரகில் நெய் வடிகிற தென்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. "நாம் தமிழர்" என்று பெயர் வைத்திருப்பதால் இவர் அனைத்துத் தமிழர்களுக்குமான தலைவர் என்று அர்த்தமாகிவிடாது. விவசாயி சின்னம் இவர்களுடைய தேர்தல் சின்னம் என்பதால் இவர் விவசாயிகளின் நண்பன் என்று அர்த்தம் கிடையாது என்பதுதான் பேட்டியின் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி. தமிழக மக்களே, இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உறவாடிக் கெடுக்கும் கெடுமதியாளர்கள் என்பதை உணர்ந்து விழிப்பாக இருக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications