Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் சுமை யார் ஆட்சியில் ஏறுச்சுங்க? பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். கடன் சுமை ஏறிக்கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். முக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தங்கம் தென்னரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.

TN Finance minister Thangam thennarasu retaliates Edappadi palanisamy on Budget

சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது; கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். எப்போதும் போல்தான் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசின் பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றது; மக்களுக்கு பயன் தராது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கொடுத்துள்ளார். "கடன் சுமை ஏறிக்கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை." எனக் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது' எனப் புலம்பியிருக்கிறார். 'திமுக அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது' எனச் சொல்லியிருக்கிறார்.

எம்ஜிஆர் மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அதிமுகவின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். 'ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அதிமுக தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.

நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதாவையும், பழனிசாமியையும் குளிர்விப்பதற்கே தமிழக சட்டமன்றம் பயன்பட்டது. 2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020-2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

'கடன்' என்ற சொல்லுக்குக் 'கடமை' என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அதிமுக அரசின் சாதனை. 'ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது' என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.

ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு கால அதிமுக அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

2014-இல் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் மத்திய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

பழனிசாமி அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க ஆட்சியில் வருகிறது" எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.

"தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது' எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+