நாகை எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது.. யார் இவர்?.. செய்த வீர தீர செயல் என்ன?
சென்னை: தமிழக அரசின் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழவேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
அவர் இன்று பல்வேறு தரப்பினருக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டுள்ளது.

எழிலரசி
இந்த எழிலரசி செய்த துணிச்சல் மிகு செயல் என்ன என்பதை பார்ப்போம். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது இந்த குளம்.

குளக்கரையில் சிறு குழந்தைகள்
இந்த குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் தவறி விழுந்தது. அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றது. v

தவறி விழுந்த குழந்தை
அப்போது அந்த குழந்தையும் குளத்தில் விழுந்தது. இரு குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடனடியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார்.

உயிர் காப்பாற்றிய எழிலரசி
இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆண்டுதோறும் வீர தீர செயல்களை புரிந்தமைக்காக கல்பனா சாவ்லா விருது பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் 30.6.2022 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் எழிலரசிக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது. கல்பனா சாவ்லா விருது 2021, உயிரிழந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications