வைக்கம் போராட்டம் நூற்றாண்டு..பெரியாருக்கு பெருமை.. செப்.17ல் வைக்கம் விருது..முதல்வர் அறிவிப்பு
சென்னை: வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் என தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஸ்டாலின், வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் சட்டசபையில் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையிலிருந்தார் பெரியார். பெரியார் காட்டிய சமூகநீதி பாதையில் திமுக அரசு பயணிக்கிறது.

வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள் வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23ம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. இந்தியாவில் நடந்த அனைத்து கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்துற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும். கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கிறேன்.
பெரியார் என்பவர் தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல மொழி மற்றும் நாடு கடந்தவர் பெரியார்.வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications