வந்துகிட்டே இருக்கு.. தொழிலாளர்களுக்கு தீபாவளி ‘பரிசு’ கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்.. கவனிச்சீங்களா?
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல செய்தி கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு எப்போது வெளியிடும் என தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக் கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில் இப்போதே பட்டாசாக அறிவிப்பை வெளியிட்டு தீபாவளி பரிசு கொடுத்துள்ளார் முதல்வர் என பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியாக வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்றும் முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியாக வெளியிடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஏராளமானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயம், நல்ல போனஸ் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கூட்டுறவு அமைப்புகள், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
