அசால்டா இருக்காதீங்க.. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! மெசேஜ் வந்துருச்சா? அடுத்து போன் கால் வரும்
சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்காமல் மேல்முறையீடு செய்து இருப்பவர்களின் கைப்பேசி எண்களுக்கு தமிழ்நாடு அரசு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டனர். அதன் பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுககள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் மூலம் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் முதல்கட்டமாக பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த எஸ்.எம்.எஸ். விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகைக்கு பல்வேறு தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டனர். அதன்படி அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். உரிமைத் தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதமும் கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் கைப்பேசி எண்களுக்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். மேல்முறையீட்டு உள்ள விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள விபரங்களை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் ஒவ்வொன்றையும் பெண்களிடம் அது சரியா என அவர்கள் உறுதிபடுத்தினர். அந்த தகவல் உறுதியான விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.
அதே சமயம் மேலும் பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வராத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். வந்து உள்ளது. அதில், "வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது உரிய தகவல்களைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்." என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த எஸ்.எம்.எஸ். வந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்தபடியாக போன் கால் வரும் என்றும் அதில் கடந்த மாதம் போல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விபரங்கள் கேட்கப்பட்டு பயனாளர்களுக்கு உரிய தொகை செலுத்தப்படும்.












Click it and Unblock the Notifications