தீபாவளிக்கு முன்பாக ஓய்வூதியம் கிடைக்குமா? முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வைத்த கோரிக்கை!
சென்னை: தீபாவளிக்கு முன்னதாக தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓவ்யுபெற்ற 93 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். வறுமை, முதுமையில் தவித்து வரும் ஓய்வூதியர்களுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அல்லது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, மாதக்கடைசியில் வரும் நிலையில், அதற்கு முன்னதாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என போக்குவரத்து ஓய்வூதியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில், "தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அரசு நிறுத்திவிட்டது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் ஓய்வூதியர் நலச் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசு மேல்முறையீடு செய்ததால் வழக்கு நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் நலிவடைந்து தவித்துவரும் ஓய்வூதியர்களுக்கு, வழக்கமாக 5 ஆம் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும்." என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications