அடி தூள்! சென்னை பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: பரந்தூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதற்கட்டமாக பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிமீ தூரத்திற்கு ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் உயர் பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் பரந்தூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழ்நாடு அரசிடம் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

பரந்தூரில் இருந்து சுங்கவார்சத்திரம், ஸ்ரீபெரும்பதூர், திருமழிசை வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 59.4 கிமீ தூரத்தில் பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை முதற்கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பரந்தூரில் புதிய விமான நிலையம் வர இருப்பது, திருமழிசையில் புதிய பஸ் நிலையம் வர இருப்பது போன்ற எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. பரந்தூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் மொத்தம் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications