ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அப்போது மத்திய அரசு தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.
அவர் தனது வாதத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுக்களின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வாதம் முன் வைத்தார். இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "மாநில அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை மத்திய அரசு முன்வைத்து உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று சொன்னாலும் கூட முந்தைய அதிமுக அரசு, இதேபோன்ற சட்டம் இயற்றியது.
அந்த சட்டம் நீதிமன்றத்திற்கு சென்ற போது திருத்த சட்டம் என்று சொல்லி அதை ரத்து செய்கிறோம். தமிழக அரசு நாங்கள் கூறிய திருத்தங்களை கொண்டு வந்து புதிய சட்டங்களை கொண்டு வருவதில் எந்த வித ஆட்சேபமும் இல்லை என என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் வழக்கறிஞர் அதன் மீது மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை. அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது குறித்து மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.
தற்போது முதல் முறையாக தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை வைத்து இருக்கிறார். மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது என்ற கதையையும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு ஐடி துறையில் சில விதிகள் தான் கொண்டு வந்து இருக்கிறதே தவிர தனியாக எந்த சட்டம் இயற்றியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. மற்றவர்கள் சொன்னார்கள் என்றால் அதை படித்து பார்த்து தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஏனென்று சொன்னால் மத்திய அரசு ஐடி விதிகளில் சில திருத்தங்களும் விதிகளும் கொண்டு வந்து இருக்கிறது. அதுவும் கூட இணைய வழி சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. அரசுக்கு வருவாய் வருவதை குறிக்கோளாக கொண்டுதான் இருக்கிறது. நேரடியாக மற்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கு வேறுபாடு உள்ளது. மத்திய அரசின் ஒழுங்கு முறை விதிகள் வலுவானதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications