"உங்க வீட்டுல 18 வயதுக்கு கீழ இருக்காங்களா?" நேராக போன் போட்ட தமிழ்நாடு அரசு.. நெகிழ்ந்து போன நபர்!
சென்னை: கொரோனாவால் பலியான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக அதிகாரிகள் போன் செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த வைப்பு நிதி 18 வயதுக்கு பின் வட்டியோடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி
மேலும் அந்த குழந்தைகள் பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். என்றும் முதல்வர் ஸ்டாலின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பலியான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு தமிழக அரசு சார்பாக அதிகாரிகள் போன் செய்து விசாரித்து வருகிறார்கள்.

என்ன கணக்கு
கணக்கெடுப்பு நடத்துவதற்காக இந்த போன் கால் செய்யப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான நபர்கள் யார் எல்லாம் பெற்றோரை இழந்துள்ளனர். குழந்தைகள் யாருக்கு எல்லாம் வைப்பு நிதி மற்றும் உடனடி நிதி உதவி கொடுக்க வேண்டும் என்பதை கண்டுபிடிப்பதற்காக கொரோனாவால் பலியான நபர்கள் எல்லோரின் வீட்டு உறுப்பினர்களுக்கும் கால் செய்கிறார்கள். ஒருவர் விடாமல் இறந்தவர்களின் வீடுகள் அனைத்திற்கும் போன் செல்கிறது.

ஏன்
வீட்டில் தாய், தந்தை இவ்விருவரில் எவரேனும் ஒருவர் பலியானாலும் உடனடி நிதி உதவியாக 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்பதால் இப்படி தமிழக அரசு மரணம் அடைந்தவர்கள் எல்லோரின் குடும்பத்திற்கும் போன் செய்து கணக்கு எடுத்து வருகிறது. கடந்த 2 தினங்களாக இந்த கணக்கெடுப்பு நடக்கும் நிலையில் இது குறித்து இணையத்தில் நெட்டிசன் ஒருவர் நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்த அளவுக்கு வேகமாக செயல்படுதுன்னு நேரடியாக உணர்ந்த தருணம்.
|
கால் வந்தது
இந்த நம்பரில் இருந்து ஒரு கால் வந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் கொரானாவால் இறந்த என்னோட பெரியப்பா பெயரை சொல்லி விசாரிச்சாங்க. மருத்துவமனையில் அவர் கூட இருந்ததால் என்னோட நம்பர்தான் எல்லா இடத்திலும் கொடுத்திருந்தேன். போனில் பேசின மேடம், இறந்தவருக்கு 18 வயசுக்கு கீழ குழந்தைங்க இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைனு சொன்னதும் எல்லாரோட விவரமும் வாங்கினாங்க. கொரானாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டத்தப்பத்தி சொல்லிட்டு அதுக்காக தான் சர்வே எடுக்குறோம்.
|
போன வருஷம்
இந்த நம்பர் நோட் பண்ணிக்குங்க. உங்களுக்கு தெரிஞ்சு யாராவது இந்த கேட்டகிரியில் இருந்தா தகவல் சொல்லுங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டாங்க. 1. திட்டம் அறிவிச்சு ஒரு வாரம் கூட ஆகல, களத்துல வேலை ஆரம்பிச்சிடுச்சு. 2. போன வருசம் இறந்தவங்களையும் விட்டுடாம தொடர்பு கொள்கிறார்கள், என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். நேரடியாக இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் பேசியதோடு, மற்ற உறவினர்களுக்கும் இதை பற்றி கூறும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
|
மாவட்டம்
ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அப்பகுதி ஆர்டிஓ அலுவலகம், விஏஓ அலுவலகத்தில் இருந்து இதுபோல போன் செய்யப்பட்டு இறந்தவர்களின் வீடுகளில் கணக்கு எடுக்கப்படுகிறது. அதோடு உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் எண் கொடுங்கள் பேசுகிறோம் என்றும் நம்பர் வாங்கி கணக்கு எடுத்து உதவி செய்கிறார்கள். கடந்த வருடம் இறந்தவர்கள் வீடுகளில் கூட கணக்கு எடுக்கப்படுவதால் பல ஆயிரம் குடும்பம் இதனால் பலன் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் மே 29ம் தேதிதான் அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் தற்போது இதற்காக தீவிர கணக்கெடுப்பு நடக்கிறது.












Click it and Unblock the Notifications