அதிமுக ஆட்சி கால கூட்டுறவு சங்க தேர்தல்கள் ரத்து- சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இம்மசோதாவைத் தாக்கல் செய்கிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1,200 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்தன என்பது புகார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தல்கள் எங்கு நடந்தது என்பதே யாருக்கும் தெரியாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இம்மசோதாவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்ய உள்ளார். இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
Recommended Video
சட்டசபையில் இம்மசோதா நிறைவேறும் நிலையில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 20,000 பேரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வரும். திமுக அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications