“ஆக்ஷனில்” சைலேந்திர பாபு.. சாட்டையை சுழற்றும் போலீஸ்! வட மாநில தொழிலாளர் சேஃப்டிக்கு ஐபிஎஸ் குழு
வட இந்திய தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்தி மற்றும் அவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஐவர் குழுவை டிஜிபி சைலேந்திர பாபு அமைத்து உள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுவது குறித்து கண்காணிக்க 4 ஐபிஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை தமிழ்நாடு காவல்துறை அமைத்து இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பீகாரில் தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தி பரப்பப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதிரடியில் இறங்கியுள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தராகண்ட், மத்திய பிரதேசம் உள்ள வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தங்கி பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக அவர்கள் தாக்கப்படுவதாகவும், கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதாகவும் கூறி போலியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

பீகார் பாஜக ட்விட்டர்
குறிப்பாக பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட வதந்தி பிற வட இந்திய மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல முன்னணி வட இந்திய ஊடகங்கள் இதுகுறித்து செய்தியாக வெளியிட்டு உள்ளன. இந்த வதந்திகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ் விளக்கம்
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை என்று விமர்சித்தார். பீகார் அரசு இது தொடர்பாக விசாரிக்க அமைத்த குழு தமிழ்நாட்டுக்கு வந்து வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பகிரப்படுவதாக விளக்கமளித்தது.

வழக்குப்பதிவு
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி மீது வழக்கு
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரின் பெயரில் தனி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

குழு அமைப்பு
இந்த நிலையில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்தி மற்றும் அவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் அவினாஷ் குமார், அபிஷேக் தீக்ஷித், ஹர்ஷ் சிங், ஆதர்ஷ் பஷேரா, மற்றும் காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா ஆகியோரை கொண்ட ஐவர் குழுவை டிஜிபி சைலேந்திர பாபு அமைத்து உள்ளார். இந்த குழு மற்ற மாநில காவல்துறையுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications