நெல்லை கொலை.. குற்றவாளிகள் உடனடியாகக் கைது! புழுத்துப் போன பொய் சொல்லும் எடப்பாடி! ரகுபதி அட்டாக்!
சென்னை: திருநெல்வேலியில் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்தவர், நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், எங்கும் கொலை எதிலும் கொலை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகிவிடு வந்த இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், சிறுது நேரத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிலையில், கொலையானவர் கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பதும், கொலை வழக்கில் ஆஜராக வந்தவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி:
இதற்கிடையே எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி.
நெல்லை கொலை:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும்வழியில், நீதிமன்றத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
4 பேர் கைது:
இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர்!
அதிமுக ஆட்சி:
கடந்த அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடியில் வாழ்வாதார உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்ட கொடூரத்தை; மறுநாள் காலையில் டி. வியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடைநாடு கொலை சம்பவம் என பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழலில் தமிழ்நாடு தவித்துக்கிடந்ததை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்:
ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் பல்கிப்பெருகிக் கிடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதன்படி 2020-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 8,91,700 ஆகும். 2022-ஆம் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 1,93,913 என மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை பார்க்கும் போதே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒருவருக்கு மட்டும் புரியவே புரியாது அவர் தான் பழனிசாமி.
திராவிடமாடல் ஆட்சி:
"நகரம் பற்றி எரியும் போது அக்கறையின்றி பிடில் வாசித்து ஆனந்தப்பட்ட நீரோ மன்னனாய்" ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு தற்போது மக்கள் நலன் பேணும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் ஆட்சியைக் கண்டு பொறாமையும் வயிற்றரெச்சலும் வருவது இயல்பு தான். பழனிச்சாமி அவர்களே கவனம் பொறாமை மன நலத்தை கெடுக்கும், வயிற்றெரிச்சல் உடல்நலத்தை கெடுக்கும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications