நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள் அவங்க தான்.. திருப்பரங்குன்றம் விஷயத்தில் அமைச்சர் ரகுபதி விளக்கம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று விரும்புபவர் ஸ்டாலின். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். அவர்கள் தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள். திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என்று பேசினார்.

திருப்பரங்குன்றம் தீபம்
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரபிறப்பித்தார்.
ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நேற்று இரவு உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் அதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இன்று இரவுக்குள் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு
தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தார்.
காவல்துறை அனுமதி மறுப்பு
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக வந்த ரவிக்குமார் மற்றும் பாஜக, இந்து முன்னணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழக அரசு மேல் முறையீடு செய்ய இருக்கிறது. எனவே தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என கூறி போலீசார் அவர்களை கலைந்து போக கூறினர்.
ஆனால் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்ததால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கலைந்து செல்லாமல் இருந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக கூறி நயினார் நாகேந்திரன் உள்பட அங்கிருந்தவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் ரகுபதி பேட்டி
சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று விரும்புபவர் ஸ்டாலின். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். அவர்கள் தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள். திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கார்த்திகை தீபம் இந்துக்கள் பண்டிகை. தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைய்யில் இந்துத்வாவுக்கு எந்த வேலையும் இல்லை.
மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்கு எடுத்தக்காட்டாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா பெற்ற தீர்ப்புக்கு புறம்பாகவே எடப்பாடி
தமிழ்நாட்டுக்கும் அரசுக்கும் ஆதரவாக இருக்கக் கூடிய பழனிசாமி இந்துத்வாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். திமுக அரசு மீது குற்றச்சாட்டை சொல்வது தான் எடப்பாடியின் வேலை. அதிமுகவின் நிலைப்பாட்டில் இருந்தே எடப்பாடி பழனிசாமி பிறழ்ந்துவிட்டார். 2014- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெற்ற தீர்ப்புக்கு புறம்பாகவே எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
இந்துத்வா அமைப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறியதை தான் நாங்கள் கூறுகிறோம். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications