நீலாங்கரையில் கூட்ட நெரிசலில் தடுமாறி விழுந்த புகைப்படக் கலைஞர்.. பதறி போய் தூக்கிவிட்ட நடிகர் விஜய்
சென்னை: சென்னை நீலாங்கரை வாக்குச் சாவடி மையத்திற்கு விஜய் வந்திருந்த போது கூட்ட நெரிசலால் தடுமாறி விழுந்த புகைப்படக் கலைஞரை விஜய் தூக்கிவிட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் காலை முதலே பிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாக்களித்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இவர்களால் ஏற்படுகிறது.

நீலாங்கரை வாக்குச் சாவடி
அந்த வகையில் இன்று காலையிலேயே நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வந்து விஜய் வாக்களித்தார். அவர் சிவப்பு காரில் வருகை தந்தார். அப்போது விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடினர். பெரும் கூட்டம் கூடியதால் விஜய்யின் பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக உள்ளே அழைத்து செல்ல முற்பட்டார்கள்.

கூட்ட நெரிசல்
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் விஜய்யின் வருகையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தி புகைப்பட கலைஞர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் விழுந்ததை பார்த்த விஜய், உடனடியாக அந்த நபரை கை பிடித்து தூக்கி விட்டார். எதிர்திசையில் கூட்டம் இல்லாத பக்கத்திற்கு அனுப்பிவிட்டார்.

கை கூப்பி நன்றி கூறிய விஜய்
அது போல் விஜய்யை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து கையசைத்த விஜய், கைகளை கூப்பி நன்றி தெரிவித்து அனைவரின் அன்பையும் ஏற்றார். அப்போது வாக்காளர் ஒருவர் Hello gentle man so proud of you...என்று விஜய்யை புகழ்ந்தார். இதற்கும் விஜய் கைகளை கூப்பி நன்றி கூறினார்.

சைக்கிளில் வந்த விஜய்
கடந்த சட்டசபை தேர்தலில் நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். பெட்ரோல் டீசல் விலையை கண்டிக்கவே விஜய் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வாக்குச் சாவடி அருகில் இருந்ததால் சைக்கிளில் விஜய் வந்ததாக விஜய் தரப்பு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications