அமித்ஷா கணக்கு 310; கெஜ்ரிவால் கணக்கு 300! யார் சரி? பாஜக Vs இந்தியா - உண்மை முகம் என்ன?
சென்னை: இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்டத் தேர்தல்களில் பாஜக 310 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அமித்ஷா சொல்வது உண்மையா? கள நிலவரம் எப்படி உள்ளது என்பது பற்றி பத்திரிகையாளர் அய்யநாதன் ஒரு கணக்கைப் போட்டு விளக்கம் அளித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 5 கட்டங்களில் மொத்தமாக 430 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

நாளை நடைபெற உள்ள 6 ஆம் கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. 7 மாநிலங்களில் நடைபெறுகின்றது.
இதுவரை தேர்தல் நடந்துமுடிந்துள்ள 5 கட்டத் தேர்தல்களிலேயே பாஜக 310 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அமித்ஷா கூறிவருகிறார்.
அவருக்கு அப்படியே நேர் எதிராக அரவிந்த கெஜ்ரிவால் 300 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றுவது உறுதி என் சவால் விட்டு வருகிறார். அதாவது 430 தொகுதிகளில் 310 என்பது அமித்ஷா தரும் உறுதிமொழி.
அதேபோல பிரதமர் மோடி, 'இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக தென்மாநிலங்களில் அதிக இடங்களைக் கைப்பற்றும்' என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
'திராவிட மாநிலங்களில்' பாஜகவுக்குச் செல்வாக்கே இல்லை என்பதே திமுக உள்ளிட்ட கட்சிகளின் கருத்தாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக இந்த முறை குறைந்தது 3 அல்லது 5 இடங்களைக் கைப்பற்றும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அது சாத்தியமில்லை என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் அமித்ஷா 310 என்று ஒரு எண்ணை முன்வைக்கிறார். அதற்குச் சாத்தியமா? அது பற்றி மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சில கணக்குகளைப் போட்டுக் காட்டி விளக்கி இருக்கிறார்.
அய்யநாதனின் கணக்கு என்ன? பாஜக 310 வருமா? இது பற்றி அவர், "இந்தத் தேர்தலில் சில விசயங்கள்தான் 'இந்தியா' கூட்டணிக்குச் சாதகமாக இருக்கின்றன. உபியில்தான் பாஜகவுக்கு அதிகப்படியான வாக்குவங்கி உள்ளது. அங்கே மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன.
அங்கே பாஜகவுக்கு 45% மேல் வாக்குவங்கி உள்ளது. ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்தால், அந்தக் கட்சி உபியிலும் பீகாரிலும் அதிக இடங்களையும் வெல்ல வேண்டும். இந்த இரண்டு மாநிலங்களையும் சேர்த்தால் 120 தொகுதிகள் வருகின்றன.
இதற்கு முன்னால் தேர்தல் களம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். பாஜக தனியாக உபியில் போட்டியிட்டு வந்தது. அதே போல் காங்கிரஸ் தனி அணி. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி தனி அணி. அதன் பிற்பாடு மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி தனி அணி. இப்படித்தான் 2019 வரை தனித்தனியாகப் போட்டுக்கொண்டிருந்தன.

ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக ஒரு கூட்டணி. அதற்கு எதிராக இந்தியா கூட்டணி. இந்தக் கூட்டணிக்குக் காங்கிரஸ் வந்துவிடுகிறது. சமாஜ்வாதி வந்துவிடுகிறது.
ஆக, உபியில் காங்கிரஸ் கிட்டத்தட்ட 45% வாக்குகளை வைத்துள்ளது. சமாஜ்வாதி 40% வாக்குகளை வைத்துள்ளது. இந்த இரண்டும் இப்போது இணைந்துள்ளன. மாயாவதி மட்டும்தான் வெளியே இருக்கிறார்.
இப்படி பாஜக கூட்டணி போட்டியிடுகின்ற 420 தொகுதிகளிலும் முதன்முறையாக இந்தியா கூட்டணியுடன் ஒன் டு ஒன் மோதுகிறார்கள்.
இந்தப் போட்டி தமிழ்நாட்டில் ஆரம்பித்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உபி, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் எனப் பல மாநிலங்களில் நேரடியாக நடக்கின்றது. இப்படி ஒரு நேரடிப் போட்டி நடப்பது இதுவே முதன்முறை. இது ஒரு சாதகமான அம்சம்.

அடுத்தது ஓபிசி வாங்கு வங்கியை இந்த முறை பாஜக வடமாநிலங்களில் அதிகமாக இழக்க உள்ளது. அதேபோல சமூக ஆதிக வகுப்பினர்கள் எனச் சொல்லக் கூடியவர்கள் இதுவரை பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.
அந்த வகுப்பினர்களின் வாக்குகளை இந்த முறை பாஜக இழக்க உள்ளது. குறிப்பாக ராஜ்புத், பட்டேல், ஜாட் ஆகிய சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்சினையில் பாஜவைவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியான ஒட்டு மொத்த கூறுகளைக் கொண்டு ஆராய்ந்தால், 300 இடங்கள் என்பது இந்தியா கூட்டணி மிகச் சாதாரணமாக வெற்றிபெறுவதற்காக அறிகுறிகள் சிறப்பாகத் தெரிகின்றன.












Click it and Unblock the Notifications