இன்று வெளியாகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் ரேங்க் லிஸ்ட்.. யாருக்கு வாய்ப்பு? முழு விவரம்! இதோ லிங்க்
சென்னை: மருத்துவ படிப்பில் சேர காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் பல வருட எதிர்ப்பார்ப்பிற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.. 2026-2027ம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று வெளியிடுகிறார்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.. அமைச்சர் அருண்ராஜ் இன்று பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை லிஸ்ட்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகத்தில் அமைச்சர் அருண்ராஜ் இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிடவுள்ளார். பட்டியல் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் தேவைப்படும் விவரங்களை உள்ளிட்டு tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது தரவரிசையை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 13,999 இடங்கள் (சில தரவுகளின்படி 16,199 இடங்கள்) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்காக உள்ளன. இந்த இடங்களுக்கான சேர்க்கையை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.
அமைச்சர் அருண்ராஜ்
நடப்பாண்டு நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து மொத்தம் 61306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மருத்துவச் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலம் மொத்தம் 72,627 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,904 பேரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை 23ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மீண்டும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கி அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அப்லோடு செய்யப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, விடுபட்ட சான்றிதழ்களை சரியான முறையில் மீண்டும் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 7ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
மாற்றுத் திறனாளிகள்
மாநில இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவ மதிப்பீட்டு வாரியங்களால் வழங்கப்படும் தகுதிச் சான்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 சதவீதம் ஒதுக்கீடு
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசின் கலந்தாய்வு குழு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் மீதமுள்ள 85 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கவுள்ளது.
ஆகஸ்ட் 13 முதல் 22 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில், அதில் இடம் பெற்றவர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்ந்து சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்ந்து 2ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரையிலும், 3ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 16 முதல் 26 வரையிலும் நடைபெறும். நிரப்பப்படாத இடங்களுக்கு அக்டோபர் 3 முதல் 5 வரை இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8ம் தேதி முதல் முறைப்படி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
