நீட் இளைஞர்கள் போராட்டத்தை முதல்வர் விஜய்க்கு எதிராக திருப்பினால்.. அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
சென்னை: நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களின் நோக்கத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால், சிலர் உள்ளே புகுந்து போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திருப்ப வேண்டும் என நினைத்தால் அதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி அரசு கையாளும் என அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார். மேலும் நீட் தேர்வு தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார் எனவும் அவர் கூறினார்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் மாணவர்களின் போராட்டம் திசை திருப்ப முயற்சி நடப்பதாகவும் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பழனி கோவில் நிலம்
எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என தெரியாமல் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பழனியில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் 100 கோடி ரூபாய் மதிப்பு இருக்கிறது என்பதே இந்த வழக்குக்கு பிறகுதான் எனக்கு தெரியும். தெரிய வந்த உடன் நில பதிவுக்கு முன்னாடியே மேல் முறையீடு செய்தோம். ஜுலை 7 ஆம் தேதி நிலம் பதிவு நடைபெற்றுள்ளது.
ஜூன் 30 ஆம் தேதியே இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து மேல் முறையீடு போயிருக்கிறோம். சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று நான் தான் முதல்வரிடம் கூறி மாற்ற வைத்தேன். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னவுடன் முதல்வர் உடனடியாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார். சிபிசிஐடியும் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. அதற்கான அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்வார்கள்.
என் மீது பழி போடுகிறர்கள்
அரசியல் நோக்கத்தோடு என் மீது பழி போடுகிறர்கள். என்னோட உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள். இதற்கு பின்னணியில் நான் தான் இருக்கிறேன். எனக்கு தெரிந்துதான் இது நடைபெற்றது என்று.. இப்படி ஒரு நிலம் இருப்பதே இந்த வழக்குக்கு பிறகுதான் எனக்கு தெரியும். இந்த மாதிரிலாம் அரசியல் செய்து என் பெயரை கெடுக்க வேண்டும். இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் மக்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்தால் மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்" என்று பேசினார்.
விஜய்யின் நிலைப்பாடு இது தான்
நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ரமேஷ் கூறியதாவது:- மிக தெளிவாக முதல்வர் தனது வலைத்தளத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல ராகுல் காந்தி கைது விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார்.
நீட் தேர்வை முற்றிலும் அகற்ற வேண்டும். அதற்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். மாநில பட்டியலில் கொண்டு வருவதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
முதல்வருக்கு எதிராக திருப்ப நினைத்தால்
நீட் தேவை கிடையாது என்று சொல்லியிருக்கிறோம். முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார். மாணவர்களின் நோக்கத்தை உண்மையாக மதிக்கிறோம். மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம். சிலர் உள்ளே புகுந்து முதல்வருக்கு எதிராக திருப்ப வேண்டும் என நினைத்தால் அதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி அரசு கையாளும்" என்று பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications
