நீட் விலக்கு மசோதா - ஒப்புதல் அளிக்க மறுத்த ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், அவர் ஒப்புதல் தர மறுத்திருந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஸ்டாலின். அதற்கேற்ப தமிழக சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது தெரியவந்தது.

தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் 13.9.2021ல் தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்முடிவு நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அதன்பின் மத்திய அமைச்சகங்கள் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்களும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் நீட் விலக்கு மசோதாவை ஏற்க மத்திய அரசு மறுத்தது. இந்நிலையில், ஜனாதிபதி நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021 ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க 1400 நாட்களுக்கு மேல் குடியரசுத் தலைவர் தாமதம் செய்து இருக்கிறார், மேலும் மசோதாவை நிராகரிப்பதற்கான காரணத்தையும் கூறவில்லை என தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications