100-க்கு 138 மதிப்பெண்கள்..பிளஸ் 2 தேர்வு முடிவை பார்த்து அதிர்ந்த மாணவி.. தேர்வு முடிவில் குழப்பம்?
சென்னை: மதுரை மாவட்டம் சூரக்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் தமிழ் பாடப்பிரிவில் 100-க்கு 138 மதிப்பெண்களும் 600 க்கும் 514 மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகவும் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. இத்தனை மதிப்பெண்கள் பெற்றும் 4 பாடங்களில் பெயில் எனவும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்த தேர்வர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.03 ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், மதுரை சூரக்குளத்தை சேர்ந்த தனித்தேர்வரின் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குழப்பம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆர்த்தி என்ற அந்த தேர்வர் தனது தேர்வு முடிவை ஆன்லைனில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது தமிழ் பாடப்பிரிவில் 100-க்கு 138 மதிப்பெண்களும் 600 க்கும் 514 மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகவும் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. அதேவேளையில் நான்கு பாடத்தில் பெயில் என்றும் தேர்வு முடிவு வந்துள்ளது. இதனால் தனித்தேர்வு எழுதிய அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்ட ஆர்த்தி, திருமணம் முடிந்த பிறகு இந்த ஆண்டு தனித்தேர்வராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளி மூலமாக விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கான தேர்வு எழுத ஹால் டிக்கெட்டும் வந்து திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வமாக கணவர் வேல்முருகனுடன் இணைந்து ஆர்த்தி என்ற அந்த பெண் பார்த்து இருக்கிறார். இதில் அவர் 600 க்கு 514 மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாக தேர்வு முடிவுகள் வந்துள்ளது. அதேவேளையில் நான்கு பாடத்தில் பெயில் என்றும் தேர்வு முடிவு வந்துள்ளது.

அதேபோல் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்ததால் தனித்தேர்வு எழுதிய அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அதேபோல், ஆங்கிலத்தில் 100-க்கு 92 மதிப்பெண்களும் கணிதத்தில் 56 மதிப்பெண்களும் இயற்பியலில் 100-க்கு 75 மதிப்பெண்களும் வேதியியல் தூறையில் 100-க்கு 71 மதிப்பெண்களும் உயர் கணிதத்தில் 100- க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
இத்தனை மதிப்பெண்கள் பெற்றும் 4 பாடங்களில் பெயில் எனவும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்து இருக்கும் அந்தபெண், தேர்வு முடிவில் குழப்பங்கள் இருப்பதால் எனது உண்மையான மதிப்பெண்கள் தெரிந்தால்தான் மேல்படிப்பை தொடர முடியும் என்றும் சொல்லியிருக்கிறார். இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தேர்வருக்கு சரியான மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்பதும் மாணவிகள் விடுக்கும் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications