3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு எக்ஸ்ட்ரா இபி கட்டணம் உண்மைதான்.. ஒப்புக் கொண்டது மின்வாரியம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் கணக்கீடு செய்யப்பட்ட மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாக வந்திருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநில மின்சார வாரியம் அதிரடி மாநில அளவிலான தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் வீடுகளின் மின் கட்டணம், கடந்த மே மாதக் கணக்கீட்டை விட இந்த ஜூலையில் வழக்கத்திற்கு மாறாக பெருமளவில் உயர்ந்துள்ளதை மின் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது இந்த அறிக்கை மூலம். இதையடுத்து, அனைத்து மட்டங்களிலும் உடனடியாக அவசரக் ஆய்வை மேற்கொள்ள உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

3.7 லட்சம் நுகர்வோருக்கு கட்டண அதிர்ச்சி
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் ஜூலை மாத மின்கட்டணத்தைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். மே மாதத்தில் செலுத்திய கட்டணத்தைக் காட்டிலும், ஜூலையில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்ததாக நுகர்வோர் குற்றஞ்சாட்டினர்.
சமீபத்தில் அமைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு பின்பே இந்த கட்டண உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விஜய் ஆட்சியை நோக்கி எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மின்வாரியத்தின் முதற்கட்ட சோதனையில் 3,70,000 மின் இணைப்புகளில் வழக்கத்திற்கு மாறான கட்டண உயர்வு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 வீடுகள் ஜூலை மாதத்தில் 1,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான பயன்பாட்டுப் பட்டியலிலும், சுமார் 1 லட்சம் வீடுகள் 500 முதல் 1,000 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுப் பிரிவிலும் திடீரென சேர்ந்துள்ளன.
கணக்கீட்டுக் குளறுபடியும், கள ஆய்வுப் பணியும்
கோடைகால வெப்பம் காரணமாக ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம் என்ற போதிலும், இந்த அளவிற்குக் கட்டணம் உயர்ந்ததற்குத் தொழில் நுட்பக் கோளாறுகளும், பணியாளர்களின் அலட்சியமுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
மின் மீட்டர்களை ஆய்வு செய்வதிலும், கணக்கீடு எடுப்பதிலும் ஏற்பட்ட தாமதமே நுகர்வோரை அதிகக் கட்டணப் பிரிவுக்கு தள்ளியுள்ளது. மேலும், பழுதுபட்ட மீட்டர்களைச் சரியாகப் பராமரிக்காததால் மின் வாரியத்திற்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7-க்குள் தீர்வு காண கெடு!
நிலைமையைக் சீரமைக்கத் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அருண் ராய் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் விநியோக இயக்குநர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தலைமைப் பொறியாளர்கள் முதல் உதவிப் பொறியாளர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் ஒதுக்கப்பட்டு, நேரில் சென்று கள ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
டிஜிட்டல் பதிவுகளையும், வீடுகளில் உள்ள மீட்டரின் நேரடி அளவீட்டையும் ஒப்பீடு செய்ய சிறப்பு வருவாய் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்ட வேண்டும். அனைத்து ஆய்வுகளும் ஆகஸ்ட் 7க்குள் முழுமையாக முடிவடையும் வேண்டும்.
ஆய்வின் போது தவறு கண்டறியப்பட்டால், உடனடியாகக் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டுப் புதிய மின் கட்டணச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
நிர்வாகக் குறைபாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மின்சார வாரியம் உறுதியாக உள்ளது. எனவே, கள ஆய்வுக்கு வரும் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
