சீருடை போதும்.. பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.. மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு கொடுத்த அரசு
சென்னை: பள்ளிகள் ஜூன் 2 ஆம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் அல்லது பள்ளி சீருடையுடன் கட்டணமில்லாமல் பள்ளிகளுக்கு அரசுப் பேருந்தில் பயணிக்கலாம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டன. வெயிலின் தாக்கம் மறைந்து பருவமழையும் முன் கூட்டியே தொடங்கிவிட்டது. இதையடுத்து பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. கடந்த வருடங்களை போல அல்லாமல் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் இந்த வருடம் திட்டமிட்டபடி வருகிற ஜூன் 2 திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்கள் வழங்கப்பட்டுவிட்டன. பள்ளிகளும் புதிய கல்வி ஆண்டுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாமல் போக்குவரத்துத் துறையும் பள்ளிகள் திறப்புக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. பொதுவாக கல்வி ஆண்டு தொடங்கி சில நாட்கள் கழித்துதான் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கும் நடைமுறை தொடங்கும்.
அதுவரை மாணவர்கள் கட்டண அடிப்படையில் தான் பேருந்துகளில் பள்ளிக்கு செல்வார்கள். இந்தமுறை அந்தக் குறையை போக்கும் வகையில் அரசு மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாணவர்களுக்கு ஒரு பஸ் பாஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தாலே மாணவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இல்லையென்றால் மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையுடனே கூட பள்ளிகளுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம்." என்று கூறியுள்ளார்.
மேலும், பள்ளிகள் தொடங்கும் நேரம், நிறைவடையும் நேரத்தில் பேருந்துகளை சரியாக இயக்குகிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications