TN Town panchayats | தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட 34 பேரூராட்சிகள் என்னென்ன.. அரசு வெளியிட்ட முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் அவ்வப்போது மக்கள் தொகை அடிப்படையிலும், வருவாய் அடிப்படையிலும், ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே மிகவேகமாக நகரமயமாகும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. நிலத்தின் மதிப்பு கடந்த 20 வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. பெருநகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் எல்லாமே வேகமாக நகரமாயமாகி வருகின்றன.

நகராட்சிகள் தரம் உயர்வு
பல ஊர்கள் பேரூராட்சிகள் என்கிற நிலையில் இருந்தாலும், நகராட்சி அளவிற்கு மக்கள் தொகை இருக்கிறது. இதனால் அரசு அவ்வப்போது பேரூராட்சிகளை தரம் உயர்த்தி நகராட்சிகளாகவும், நகராட்சிகளை தரம் உயர்த்தி மாநகராட்சிகளாகவும் அறிவிக்கிறது. நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுடன்இணைப்பதை அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அப்படி கடந்த சில ஆண்டுகளில் பல ஊர்கள் மாற்றப்பட்டுள்ளன.
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு
அந்த வகையில் தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. மேலும் 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாகவும், 3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை வாடிப்பட்டி
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சாத்தான்குளம், கோவை மாவட்டத்தில் ஒத்தக்கால்மண்டபம், சேலம் மாவட்டம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் பர்கூர் ஆகிய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
தேனியில் பழனிசெட்டிப்பட்டி
தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி, மேலசொக்கநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், இடிகரை, கோசெட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம், செவுகம்பட்டி, தென்காசி மேலகரம், ராமநாதபுரம் முதுகுளத்தூர் உள்ளிட்டப் பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கோவையில் ஆலந்துறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை, புத்தாளம், மண்டைக்காடு, ஆத்தூர், கோவையின் ஆலந்துைறை, ஈரோட்டின் எலாத்தூர், தேனியின் பூதிப்புரம், சேலத்தின் நங்கவல்லி உள்ளிட்டப் பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications