குழந்தைகளுக்கு இலவச பஸ் பயணம்.. சீட் வேண்டுமென்றால் டிக்கெட்! ட்விஸ்ட் வைத்த போக்குவரத்து துறை
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது.
நாளை (மே 10) வரை இந்த அமர்வு நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை மீதான மணிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்தார்.

கட்டணம் இல்லை
தமிழ்நாட்டில் ஏற்கனவே 3 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயணித்து வருகிறார்கள். 4-12 வயதுடையவர்களுக்கு அரை டிக்கெட் வழங்கப்படுகிறது. அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் உத்தரவை அடுத்து 5 வயது வரை குழந்தைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பயணிக்கலாம் என்று கருதப்பட்டது. இதனிடையே இது குறித்து போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய விளக்கம்
அதாவது அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவை எனில் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் 5 - 12 வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த மே 5ஆம் தேதி போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின்போது, 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் பெறுவதற்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் எதும் பெறப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அசௌகரியம்
5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக் கட்டணம் பெற வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல நாளிதழில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயணச்சீட்டு இரத்து பற்றி பொதுமக்கள் சிலரின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்துச் செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்குப் பயணச்சீட்டு பெற்றுப் பயணிப்பது தேவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

தேவைப்பட்டால் டிக்கெட்
இந்நிலையில் தற்போதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை.

போக்குவரத்துத் துறை அறிவிப்பு
அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம சம்பந்தமாக, 3 வயது முதல் 12 வயது என்பதற்குப் பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications