எடியூரப்பா அனுப்பிய லெட்டர்.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. இரவே டெல்லி பறக்கும் துரைமுருகன்.. பின்னணி
சென்னை: தமிழ்நாடு-கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அரசு பிடிவாதமாக இருக்கிறது.
பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மேகதாது அணை அவசியம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பொது வெளியில் அறிவித்த பிறகு விஷயம் பூதாகரமாக வெடித்தது.

கர்நாடகாவின் அடாவடி
உச்சநீதிமன்றம் விதித்த ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஸ்டாலின் எதிர்ப்பு
மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இது இரு மாநில நல்லுறவுக்கும் உகந்தது அல்ல என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாடு சார்பில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பாதிப்பு ஏற்படாது
இவ்வாறு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், '' மேகதாது அணையால் இரு மாநிலங்களுக்கும் பலன் ஏற்படும். தமிழ்நாடு விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது .
பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணை கட்டப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று எடியூரப்பா கூறி இருந்தார்.

துரோகம் இழைத்த கர்நாடகா
இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு தேர்தல்,கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி சத்தமேயில்லாமல் தமிழ்நாட்டுக்கு மிக பெரிய துரோகத்தை செய்துள்ளது கர்நாடகா. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அளவில் புதிய அணை கட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றை பாசன ஆதாரமாக நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் அபாயமும், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

துரைமுருகன் பயணம்
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிய விவகாரம் தொடர்பு குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செகாவத்தை சந்தித்து பேசுகிறார். மேகதாது, முல்லை பெரியாறு அணை விவகாரம், நதிகள் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் அடங்கிய மனுவை செகாவத்திடம், துரைமுருகன் வழங்குகிறார். கேரளா, ஆந்திராவுடனான நதிநீர் விவகாரங்களும் அப்போது விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications