குரூப் 4 தேர்வு ரிசல்ட் பார்த்தீங்களா? சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவது மற்றும் அது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை தேர்வர்களுக்கு டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தேர்வுகளை ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள். அதிலும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுகளை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுவதுண்டு.

tnpsc group 4 exam jobs 4

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரை பலரும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிப்பார்கள். இந்த ஆண்டுக்கான குரூப் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், உள்ளிட்ட பல பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜுன்-9 ம் தேதி நடைபெற்று முடிந்தது.

முதலில் 6,244 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு இரண்டு முறை பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்துள்ளது. குருப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-IV (தொகுதி-IV)-ற்கான நேரடி நியமனத்திற்காக 30.01.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தேர்விற்கான எழுத்துத் தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+