ஓ.பி.எஸ். வாசித்த பட்ஜெட் உரையை கேட்க... தேனியிலிருந்து வந்த படை
Recommended Video
சென்னை: துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அதனை காண தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு பெரும்படையே வந்திருந்தது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளான நேற்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது சட்டப்பேரவை வளாகம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவைக்கு வந்த போது அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் காரை விட்டு இறங்கி சில நிமிடங்கள் நின்று தனது ஆதரவாளர்களிடம் பூங்கொத்தை வாங்கிய பின்னரே அவைக்குள் சென்றார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த அமைச்சர்களும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இதனிடையே அதிமுக அரசின் முழுமையான பட்ஜெட் இதுவே கடைசி முறை என்பதால், ஓ.பி.எஸ்.வாசித்த பட்ஜெட் உரையை கேட்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து திரளான அதிமுகவினர் பேரவைக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து ஓ.பி.எஸ்.ஸின் உரையை பார்த்தனர். எப்போதும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் உரையாற்றுவர். அப்போது அவரது ஆதரவாளர்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்படுவர். இது வழக்கமான ஒரு நடவடிக்கையாகும்.
ஓ.பி.எஸ். நிதி நிலை அறிக்கை படித்து முடிப்பதற்குள் அவருக்கு சில தொழிலதிபர்களும், தொழில் நிறுவன அதிகாரிகள் தங்கள் நிறுவன உயர் அதிகாரிகளிடம் மலர்கொத்து கொடுத்து அனுப்பியிருந்தனர். சுமார் 12 மணிக்கு மேல் விலையுயர்ந்த கார்களில் வந்திறங்கிய அவர்கள், ஓ.பி.எஸ்.ஸை பார்த்து நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்க ஓடினார்கள். அதிமுக சீனியர் நிர்வாகி ஒருவரும் இதேபோல், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து வாழ்த்து கூற சென்ற போது அவரை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். அதற்கு அவர், என்னை தெரியவில்லையா, ஆச்சரியமாக இருக்கிறதே என தனது புகழை தானே பாடினார். போதும் போதும் என அவரை அந்த காவலர் வந்த வழியாகவே திருப்பி அனுப்பினார்.












Click it and Unblock the Notifications