பலத்த காற்று வீசும்.. இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழையும் காத்திருக்கு! குடையை மறக்காதீங்க மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்து 5 நாட்களுக்கு மாநிலத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதமே வெப்பம் பல இடங்களில் உச்சம் தொட்டது. ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பம் அவ்வப்போது சதமும் அடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த சில காலமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென் இந்தியாவில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் பல இடங்களில் பெய்யும் மழை வெப்பத்தைத் தணித்து வருகிறது.

வானிலை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் லக்கூரில் 80 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல கடலூர் தொழுதூரில் 60 மிமீ மழையும், மணம்பூண்டி, திண்டிவனம், வெங்கூர் பகுதிகளில் தலா 50 மிமீ மழையும் பெய்துள்ளது. வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

வானிலை மையம்
அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பத்தில் பெரியளவில் வேறுபாடு இல்லை. வரும் காலத்தில் எங்கே மழை பெய்யும் என்பது குறித்த முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்.

10 மாவட்டங்களில் மழை
இன்று மார்ச் 24ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் நாட்கள்
நாளை மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மார்ச் 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 27 மற்றும் 28 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications