இன்று தீபாவளி.. கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து.. தமிழகம் முழுதும் 48000 போலீஸார் பாதுகாப்பு
சென்னை: இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் தங்கள் தீபாவளி பண்டிகையை தெரிவித்து கொண்டுள்ளனர். தமிழக மக்களும் சிறப்புடன் பண்டிகையை கொண்டாட துவங்கியிருக்கிறார்கள்.

பண்டிகை: விடிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருகிறார்கள்.. அதேபோல, தலை தீபாவளி கொண்டாடும் ஜோடிகளுக்கு தட புடலான விருந்துகளும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றன.
சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே பொதுமக்கள் பலரும், முன்கூட்டியே விடுமுறை நாளுக்காக காத்திருந்தனர்.. நாளை வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை மறுநாள் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்திருக்கிறது. எனவே, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பிருந்தே பயணம் மேற்கொள்ள துவங்கினார்கள்.
சிறப்பு பஸ்கள்: தமிழக அரசும், ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காகவே சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை இயக்கி வருகிறது.. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன..
அதேபோல, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்களில் முன்பதிவு செய்து பலரும் பயணித்தனர்.. இதனால், பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.. சொந்த காரிலும், வேனிலும் பலர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றார்கள்.
ஆம்னி பஸ்கள்: ஆம்னி பேருந்துகளில் 3 நாட்களில் 1.77 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். நேற்று பிற்பகல் வரை, சிறு சிறு விதிமீறல்களில் ஈடுபட்ட 594 ஆம்னிபேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரயில்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
இதேபோல, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
பாதுகாப்பு: தீபாவளி என்பதால், தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தீ விபத்தை தடுக்க தயார் நிலையில் 1,100 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications