சுடுகாடு ஊழல் வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
சென்னை: சுடுகாடு கூரை ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாடு கூரை அமைப்பதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க.ஆட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் டி.எம்.செல்வகணபதி. அந்த காலகட்டத்தில் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைக்குப் பிறகு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சுடுகாடு கூரை அமைப்பதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறியது.
இந்த ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை கடந்த நவம்பர் 9 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
சி.பி.ஐ. தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பலர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications