களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டங்கள்.. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை!
சென்னை : மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை, பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படை தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ஜவஹர்லால் நேரு அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு விட்டு, கார் மூலம் ராஜ்பவன் செல்கிறார். இரவு சென்னையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
Recommended Video
இந்நிலையில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிலும், செஸ் போட்டியோடு தொடர்புடைய தமிழ்நாட்டில் செஸ் போட்டி நடைபெறுவது சிறப்பானது என மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 27-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவும் இன்று செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி பூங்காக்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications