உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் பதிவு செய்வது எப்படி?
சென்னை : அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள்.
தமிழக அரசின் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கு நடப்பு கல்வியாண்டில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் தகுதியுள்ள மாணவிகள் விரைந்து பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி உதவித்தொகை திட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

ரூ.1000 உதவித்தொகை
மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்பிக்க கால அவகாசம்
பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 25ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் இன்று (ஜூலை 10) வரை நீட்டிக்கப்பட்டது.

இன்றே கடைசி
அதன்படி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் அகும். எனவே தகுதியுள்ள மாணவிகள் இன்று இரவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தை ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அன்றே, தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள மாணவிகள் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக தங்கள் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யம். ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு
ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலை வழங்கி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications