மீண்டும் உச்சம் தொடும் தக்காளி? சென்னையில் திடீரென இன்று விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் தக்காளி லாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் விலை உச்சம் தொடலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் காய்கறிகளின் விலைகள் அவ்வப்போது உயர்வதும், குறைவதும் வாடிக்கையாக உள்ளன. அந்த வகையில் அடிக்கடி வெங்காயத்தின் விலை என்பது உயர்ந்து பொதுமக்களை சிரமப்படுத்தும். மற்றபடி பிற காய்கறிகளின் விலைகள் எப்போதாவது தான் உச்சம் தொட்டு பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்நிலையில் தான் தற்போது தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை ரூ.200யை கூட தொட்டது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டுகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை தக்காளி விற்பனையாகும் நிலையில் ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனையானது. இது நேற்று ரூ.20 குறைந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பது தக்காளி வரத்து குறைந்தது தான் என வியாபாரிகள் கூறியுள்ளனர். அதாவது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து அதிகளவில் லாரிகளில் தக்காளி வரும். ஆனால் இன்றைய தினம் இருமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதாவது வழக்கமாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து 80 லாரிகளில் தக்காளி வருமாம். ஆனால் இன்றைய தினம் 25 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை என்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications