முதல்வர் விஜய்க்கு தெரியாமல் வேட்டை? கூட்டணி கட்சியை அலறவிட்ட அந்த உயர் அதிகாரி
சென்னை: தவெக தலைமையிலான ஆட்சியில், அரசுத் துறை ஒன்றில் நிலவி வரும் லஞ்சப் புகார்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, ஆளும் கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
"அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லியே ஒரு உயர் அதிகாரி கோடி கோடியாகக் கல்லா கட்டுகிறார்.. கவனிப்பு இல்லாமல் ஒரு கோப்பு கூட நகர மாட்டேன் என்கிறது" என்ற குற்றச்சாட்டு தலைமைச் செயலக வட்டாரங்களில் எதிரொலித்து வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மக்கள் நலத் திட்டங்கள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், குறிப்பிட்ட அந்தத் துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கும், அதன் கூட்டணி அமைப்புகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. துறை ரீதியான பணி மாறுதல்கள், ஒப்பந்த அனுமதிகள், கோப்பு ஒப்புதல்கள் என எதுவாக இருந்தாலும், கேட்கும் தொகையைக் கொடுத்தால் மட்டுமே கையெழுத்து விழும் என்ற நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் உத்தரவையே தூக்கி எறிந்த அதிகாரி!
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்தக் விவகாரத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. தவெகவின் முக்கியக் கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவருக்கு நெருக்கமான அரசு ஊழியரின் பணி மாறுதல் தொடர்பாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் கோரிக்கை விடுத்தனர். விவகாரத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்ட மாண்புமிகு அமைச்சரும், உடனடியாக அந்த மாறுதல் கோப்பிற்கு பச்சைக்கொடி காட்டி, உரிய அதிகாரியிடம் ஒப்புதல் அளிக்குமாறு உத்தரவிட்டார்.
ஆனால், அமைச்சரின் உத்தரவு அந்த உயர் அதிகாரியின் டேபிளுக்கு வந்ததும் கதையே மாறியது. அமைச்சர் சொன்னால் மட்டும் போதாது, நமக்கான கவனிப்பு எங்கே? என்ற பாணியில் அந்த அதிகாரி கோப்பை நகரவிடாமல் முடக்கி வைத்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்கள் பலமுறை நேரில் சென்று வலியுறுத்தியும், "எனக்கு வர வேண்டியது வராமல் எந்த உத்தரவும் வெளியாகாது" என்பதில் அந்த அதிகாரி உறுதியாக இருந்துள்ளார்.
இறுதியில், வேறு வழியின்றி அந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுத்த பிறகே, அந்த பணி மாறுதல் உத்தரவு கையெழுத்தாகி வெளியாகியுள்ளது. அமைச்சரின் அதிகாரப்பூர்வ உத்தரவையே ஒரு அதிகாரி பணம் வாங்கிக்கொண்டு தான் செயல்படுத்துவார் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வி கூட்டணி தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய்க்குத் தெரியாமல் நடக்கும் கூத்து
இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த லஞ்ச வேட்டையும், தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகமும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் செல்லாமலேயே அரங்கேறி வருவதுதான். நல்லாட்சியைத் தருவதாக உறுதியளித்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு சில உயர் அதிகாரிகள் தங்களின் சுயலாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன் கைக்குக் கீழே நடக்கும் இந்த அத்துமீறல்கள் எதுவும் முதலமைச்சருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதால், அந்த அதிகாரி மேலும் துணிச்சலாக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உயர் மட்டக் குழுவிடம் பாய்ந்த புகார்!
தங்கள் கட்சி பரிந்துரைத்த கோப்பிற்கே இந்த கதி என்றால், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை என்னவாகும் என்று ஆத்திரமடைந்த கூட்டணி கட்சி முக்கியப் புள்ளிகள், இனி பொறுப்பது சரியல்ல என்று முடிவெடுத்துள்ளனர். அந்த அதிகாரியின் லஞ்சப் பட்டியல் மற்றும் அமைச்சரின் உத்தரவை அவர் அலட்சியப்படுத்திய ஆதாரங்களுடன், தவெகவின் தலைமை நிலைய உயர்மட்டக் குழுவிடம் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.
முதலமைச்சரின் நேர்மையான நிர்வாகத்திற்கு இந்த மாதிரி அதிகாரிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். உடனடியாக இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும என்று அந்த புகாரில் கூட்டணி தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
