சுற்றுலா விசா.. ஊட்டியில் பிறந்த பெண்.. சென்னை விமான நிலையத்தில் தெரிய வந்த பெரிய உண்மை
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற இளம் பெண் ஒருவரையும், மலேசியா செல்ல முயன்ற வாலிபர் ஒருவரையும் குடியுரிமை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.
கைதான இருவரும் யார் என்பது குறித்து விசாரித்த அதிகாரிகளுக்கு பெரிய உண்மைகள் தெரியவந்தது. சுற்றுலா விசாவில் வந்த குடும்பம், ஊட்டியில் செட்டில் ஆகியிருந்தார்கள் என்பது தெரியவந்தது.
சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த இலங்கை குடிமக்கள் இந்தியாவிலேயே நிரந்தரமாக குடியேறினாலும், குடியுரிமை வாங்கவே முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதேபோல் சட்டவிரோதமாக படகில் வந்து செட்டில் ஆனவர்களும் குடியுரிமை வாங்க முடியாமல் இருக்கிறார்கள். ஏனெனில் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து சட்டவிரோதமாக நிரந்தரமாகத் தங்குபவர்களுக்கு குடியுரிமை வழங்குவது இல்லை என்பதை மத்திய அரசு கொள்கையாகவே வைத்துள்ளது.

சுற்றுலா விசாவின் அடிப்படை நோக்கமே, குறுகிய காலத்திற்கு இந்தியாவிற்குச் சுற்றுலாவுக்காக அல்லது குறுகிய காலப் பயணங்களுக்காக மட்டுமே வருவது. இந்த விசாவைப் பயன்படுத்தி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதோ அல்லது வேலை செய்வதோ சட்டப்படி குற்றம். எனவே
சுற்றுலா விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து தங்குவது அல்லது அதை வேலை/தங்கும் விசாக்களாக மாற்ற முயற்சிப்பது என்பது விசா விதிகளை மீறிய செயல் ஆகும். சட்டத்தை மீறுபவர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுத்துவிடுகிறது மத்திய அரசு.
பொதுவாக இந்தியாவில் குடியுரிமை கோருபவர் வேலை விசா, நீண்ட கால விசா அல்லது தங்கும் விசா போன்ற சரியான விசாவுடன் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்க வேண்டும். சுற்றுலா விசா இதில் சேர்க்கப்படாது. அப்படி முறையான விசாவில் வருவோர், குடியுரிமை கோருவதற்குச் சற்று முன்பு தொடர்ந்து 12 மாதங்கள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு, கோரும் தேதிக்கு முன் உள்ள 14 ஆண்டுகளில் குறைந்தது 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
ஒரு இலங்கைத் தம்பதியர் இந்தியக் குடியுரிமை பெற வேண்டும் என்றால் அவர்கள் முதலில் சட்டவிரோதத் தங்குதலைக் கைவிட்டு, தங்கள் நாடான இலங்கைக்குத் திரும்பிச் சென்று, பின்னர் முறையாகக் கீழ்க்கண்ட விசாக்களின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட கால விசா மற்றும் வேலை விசா ஆகியவற்றை இந்தியாவில் வேலை பெற்று, அந்த விசா மூலம் சட்டப்பூர்வமாகத் தங்கி, அதன் பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி வந்தால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற இளம் பெண் ஒருவரையும், மலேசியா செல்ல முயன்ற வாலிபர் ஒருவரையும் குடியுரிமை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் இலங்கை செல்ல முயன்ற பெண்ணின் பெயர் வலந்தியா பீட்ரைஸ் (வயது 24) ஆகும். மலேசியா போக முயன்ற வாலிபரின் பெயர் ஷிமுல் தாஸ் (32).
இதில் இளம்பெண் வலந்தியாவின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து 'சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கேயே குடியேறினார்களாம். பின்னர் அவர்கள் ஊட்டியில் வாழ்ந்தனர். வலந்தியாவும் ஊட்டியில் தான் பிறந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, இங்குள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி அதன்மூலம் இந்திய பாஸ்போர்ட்டும் பெற்றுவிட்டார்களாம். ஆனால் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.
வலந்தியா இலங்கைவாசி என்பதை மறைத்த குற்றத்திற்காக வலந்தியாவை குடியுரிமை அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல பிடிபட்ட வாலிபர் ஷிமுல் தாஸ் வங்காளதேசத்தை சேர்ந்தவர். இவரும் கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளார். இங்கு குடியேறி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கி பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளார். அவரையும் குடியுரிமை அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications