டிஆர் பாலு அவதூறு வழக்கு! கோர்ட்டில் ஆஜரான அண்ணாமலை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு! இன்று நடந்தது என்ன?
சென்னை: சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக திமுக எம்பி டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகி உள்ள நிலையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர் சமீபத்தில் திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்பி, பிரமுகர்கள் என 12 பேரின் சொத்து பட்டியல் குறித்த விபரங்களை வெளியிட்டார். இந்த பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியானது.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றனர். மேலும் மன்னிப்பு கேட்கும்படி திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்கள் நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால் அண்ணாமலை மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. தான் வெளியிட்ட தகவல் உண்மை தான். இதனால் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என உறுதியாக அண்ணாமலை கூறினார். இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர்பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை 18 வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நான் எம்பியாக இருக்கிறேன். மத்திய அமைச்சராக இருந்திருக்கேன். திமுகவிலும் பல பொறுப்புகளில் உள்ளேன்.
எனக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக கூறியுள்ளார். அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
டிஆர் பாலு தரப்பில் திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். மேலும் டிஆர் பாலு எம்பி சாட்சியம் அளித்தார். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு அவர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
அதன்பிறகு வழக்கு தொடர்பாக அண்ணாமலை நேரில் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு வழக்கு தொடர்பாக நகல் வழங்கிய நீதிமன்றம் மீண்டும் ஆகஸ்ட் 24ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக அண்ணாமலையுடன் ஏராளாமான பாஜகவினர் நீதிமன்றம் வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications