சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இதய பகுதியில் போக்குவரத்து மாற்றம்! வெளியான டிராஃபிக் அப்டேட்!
சென்னை: சென்னை எழும்பூர் பகுதியில் நீண்டநாட்களாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாந்தியன் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, ஆதித்தனார் சாலை மற்றும் காவலர் சாலை ஆகிய நான்கு முக்கியச் சாலைகள் இணையும் எழும்பூர் சந்திப்பு பகுதிகளில் தினமும் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா சாலைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த சந்திப்புகளில் இரண்டு ரவுண்டானாக்கள் இருந்தாலும், போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாதது மற்றும் சிக்னல் வசதி ஏற்பாடு செய்யப்படாதது காரணமாக நெரிசல் அதிகரித்தது.

இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அவசர சேவைகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பாந்தியன் சாலையில் செயல்படும் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கும், தமிழ்ச்சாலையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கும் வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி பெரும் சிரமம் அனுபவித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை போக்குவரத்து மாற்றம்
இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு, அதிக போக்குவரத்து நேரங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன. காலை 8 மணி 30 நிமிடம் முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும்.
எழும்பூர் போக்குவரத்து
இந்த நேரத்தில் பாந்தியன் ரவுண்டானா முதல் மாண்டியத் சாலை சந்திப்பு வரை செல்லும் ரூக்மணி லட்சுமிபதி சாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்படும். அதாவது இந்த சாலையில் வாகனங்கள் ஒரு திசை நோக்கி மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். அதேசமயம் எத்திராஜ் சாலை வழியாக எழும்பூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையை பயன்படுத்த முடியாது. அவை மாண்டியத் சாலையில் இடப்புறம் திருப்பி மாற்றி அனுப்பப்படும்.
போக்குவரத்து காவல்துறை
மேலும் மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனில் இருந்து வரும் வாகனங்களுக்கு ருக்மணி லட்சுமிபதி சாலையில் இடப்புறம் திரும்ப அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்தப் பகுதியில் நெரிசல் குறைந்தால், அவசர சேவைகள் தாமதமின்றி செல்லும் வசதி கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல்
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்த பின் போக்குவரத்து நிலைமை எப்படி உள்ளது என்பது மதிப்பீடு செய்யப்படும். அதன் பின்னர் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். சென்னை நகரின் முக்கிய பகுதியாக இருக்கும் எழும்பூரில், இந்த நடவடிக்கையால் வாகன நெரிசல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறையின் இந்த மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications