களத்தில் இறங்கிய ஸ்டாலின்! ரயில் விபத்து ‘ஹெல்ப்லைன்’ எண்.. 3 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விரையும் அமைச்சர்!
சென்னை : கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், உடபடியாக களத்தில் இறங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தக் கோர விபத்தில் காயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை நோக்கி வந்த ரயில் ஒடிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளான நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்." எனத் தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார். தற்போது அரியலூரில் இருக்கும் சிவசங்கர், நாளை காலை முதல் விமானத்தில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசு விரைவாகச் செயல்பட்டு, உதவி எண்களை உடனடியாக அறிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம். ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications