தாம்பரம் ரயில் நிலையம் வேறு மாதிரி மாறுது.. ஆகஸ்ட் 1 முதல் 14 வரை முக்கிய ரயில்கள் பகுதியாக ரத்து
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுவடிவமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில், 2024 ஆகஸ்ட் 1 முதல் 14 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பகலில் செல்லும் வைகை, பல்லவன், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், உள்பட பல்வேறு ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பகலில் வரும் தென் மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை தான் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மூன்றாவது ரயில் முனையமான தாம்பரம் ரயில் நிலையம் அடுத்த 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்பதை யூகித்து இப்போதே அதனை மேம்படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தாம்பரம் என்பது ஒரு காலத்தில் சென்னையின் நுழைவு வாயிலாக இருந்தது. ஆனால் அதிகப்படியான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் வருகை காரணமாக செங்கல்பட்டு வரை சென்னை மாநகரம் வளர்ந்துவிட்டது. இதனால் சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

தாம்பரத்திற்கு உள்ள மின்சார ரயில் வசதி தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும். எளிய மக்கள், சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், சென்னையில் இடம் இல்லாதவர்கள் எல்லாருமே தாம்பரத்தில் தான் குடியேறினார்கள்.அவர்கள் அனைவருமே தாம்பரத்தில் உள்ள மின்சார ரயில் சேவை மற்றும் எல்லா ரயில்களும் நின்று செல்லும் இடம், சென்னையின் நுழைவு வாயில் போன்ற காரணங்களால் குடியேறினார்கள். இன்று தாம்பரம் மாநகராட்சியாக உருவெடுத்துவிட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே தாம்பரம் அருகில் தான் இருக்கிறது.
சென்னையின் ஒரு பாதி மக்கள் தாம்பரத்தில் தான் குடியிருக்கிறார்கள். எனவே தாம்பரம் ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட உள்ளது. ஏனெனில் எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.
இனிமேல் தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து தான் செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதேபோல் வடமாநில ரயில்களும் தாம்பரத்தில் இருந்தே செல்ல போகின்றன. எனவே பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், சென்ட்ரலுக்கு நிகராக வசதிகள் தேவையாகும். ஆனால் ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை.
எனவே தான் மத்திய அரசு 1000 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையத்தை வேறலெவலில் மாற்ற முடிவு செய்துள்ளது. ரயில் நிலையங்கள் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சேர்கள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருப்பக்கமும் உள்ள முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், பிளாட்பார்ம்கள் மாற்றப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் ஒருபுறம் எனில், கிழக்கு தாம்பரத்தில், நான்கு நடைபாதைகள் உடைய பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, விரைவு ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் எட்டு நடைமேடைகள் இருக்கின்றன. விரைவு ரயில்களை கூடுதலாக இயக்க வசதியாக, மேலும் இரண்டு தண்டவாளங்கள் மற்றும் சரக்கு ரயிலுக்கான தனி பாதை அமைக்கும் பணி, இரவு, பகலாக தற்போது நடந்து வருகிறது. இந்த சரக்கு ரயில் பாதை எழும்பூர் வரை அமைக்கப்படுகிறது. அதேபோல், புதிதாக சிக்னல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் வந்தபின், எந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாவது வாடிக்கை. இதையடுத்து, அந்த ரயில் அந்த தடத்திற்கு மாற்றப்படும். இதனால், ரயில்கள் இயக்குவதில் சிரமம் இருந்து வந்தது.
இதை கட்டுப்படுத்தும்விதமாக, தாம்பரத்திற்கு வரும் முன்னரே, அரை கி.மீ., துாரத்தில் ரயில்களை பிரித்து அனுப்பும் வகையில் பணி தற்போது நடக்கிறது. இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடப்பதால் ரயில் சேவைகளில், 2024 ஆகஸ்ட் 1 முதல் 14 வரை கீழ்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
1. சென்னை எழும்பூர் -காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஆகஸ்ட் 8, 9.10, ஆகிய நாட்களில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், ஆகஸ்ட் ஒன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும்.இந்த ரயிலும் செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் ஒன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும்.இந்த ரயிலும் செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. தாம்பரம் - புதிய தின்சுகியோ எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை தாம்பரத்திற்கு பதில் சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. தாம்பரம் -ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயில் தாம்பரம் கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. Various train services including Vaigai, Pallavan, Rockport Express have been partially cancelled












Click it and Unblock the Notifications