"திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை": டிஆர்பி ராஜா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு
சென்னை: வடமாநிலப் பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டிஆர்பி ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை என்று டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், மற்ற மாநிலத்தில் உள்ள பெண்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை மனிதர்களாகக் கூட கருதாமல் இருந்தனர். இன்றைக்கும் கூட வட இந்தியாவில் அதே நிலை நீடிக்கிறது என்று திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியிருந்தார். அமைச்சர் டிஆர்பி ராஜாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலை, டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, இது மிகவும் நீண்ட நெடிய கேள்வி. கடந்த நான்கு மாதங்களாக தினந்தோறும் நிருபர்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்ல விஷயம் தானே. சந்திப்பதால் நல்ல முடிவுகள் வந்து சேரும். எங்கள் கூட்டணிக்கு அனைவரையும் வரவேற்கத் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் நானும் சந்திப்பேன் என்றார்.
பெண்களை மதிக்காத திமுக
வடமாநிலப் பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது குறித்த கேள்விக்கு, திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை. திமுகவோடு கூட்டணியில் இருந்த கட்சி சார்ந்த தலைவர் தான் பிரதமர் மோடியின் தாயாரை விமர்சித்தார். அப்போது கூட திமுக தலைவர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. அவர்கள் வடக்கு மற்றும் தெற்கைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது என்றார்.












Click it and Unblock the Notifications