தமிழக அரசியலில் பரபரப்பு: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் டெல்லி தலைமை விருப்பம்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. ஆளும் திமுகவுடனான நீண்டகால கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் புதிய கூட்டணி அமைப்பதா என காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை, திமுகவுடனான கூட்டணி "உறுதியானது" என்று திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார். இம்மாத துவக்கத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் "வலுவாக உள்ளது" என்றும் அவர் கூறினார். இதனால், தவெகவுடன் கூட்டணி வதந்திகளை அவர் மறுத்துள்ளார்.

எனினும், காங்கிரஸ் உயர்மட்டத்தில் வேறு குரல்கள் ஒலிக்கின்றன. டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த ஆலோசனைகளில், திமுக அதிக தொகுதிகளை வழங்க மறுத்தால் தவெகவுடன் இணையலாம் என்ற கருத்துகள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுச்சாமி, ஐவர் குழுவை டெல்லி தலைமை அமைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்படியானால், டெல்லி தலைமைக்கு விஜய் உடன் கூட்டணி அமைக்கும் திட்டம் உள்ளது என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். மாநில தலைமை தன்னிச்சையாக எப்படி குழு அமைக்க முடியும் என்று ஒன்இந்தியா தரப்பில் கேட்டபோது, டெல்லியிலிருந்து ஏதாவது அறிவிப்பு வந்ததா, வரவில்லையல்லவா, அப்படியானால் இதை அமைக்கும் முடிவு யாருடையது என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன் என்று தெரிவித்தார் அவர்.
தவெக தரப்பில், விஜயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசை "ஊழல்" என்று விமர்சித்து வரும் தவெக, சிறு கட்சிகளுடன் இணைய தயாராக உள்ளது. ஆனால், பாஜக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
பகுப்பாய்வாளர்கள் கருத்து: திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்தால், 2026 தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறும். திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, தவெக தலைமையிலான மூன்றாவது அணி என போட்டி ஏற்படலாம். காங்கிரஸ் திமுகவை விட்டு விலகினால், திமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications