சென்னை வேற மாதிரி மாறுது.. போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!
சென்னை: போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. போரூர் முதல் வடபழனி வரை 7 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் முழு ரயிலையும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைந்துள்ளன. சென்னையில் முதன்முறையாக போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே முதல் டபுள் டக்கர் மெட்ரோ வழித்தடம் அமைந்துள்ளது. இதேபோன்று மெட்ரோ ரயில் பாதையில் முதன்முறையாக 5 டிராக்குகளும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் காலதாமதம் ஆனது. இந்நிலையில், போரூர் - வடபழனி இடையே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று முழு ரயிலையும் இயக்கும் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
போரூர் - வடபழனி வழித்தடத்தில் ஏற்கனவே ரயில் என்ஜின் சோதனை நடத்தப்பட்டு, ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்று பெறப்பட்டுள்ளது. என்ஜின் சோதனை ஓட்டத்தின் போது, மெட்ரோ ரயில்கள் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்படும் வசதி, பிரேக் செயல்படும் விதம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் நிலை, பயணிகளின் பாதுகாப்பு, கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த சோதனைகளின் அடிப்படையில், தற்போது தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், போரூர் முதல் வடபழனி வரை 7 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் முழு ரயிலையும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்று உள்ளது. தண்டவாளத்தின் உறுதி, சிக்னல் அமைப்பு உள்ளிட்டவை சோதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என கூறப்படும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications