ஜனவரி 9ல் தமிழகம் வரும் அமித்ஷா.. ஜனவரி 5ல் பொதுக்குழுவை கூட்டிய அமமுக.. டிடிவி தினகரன் முடிவு என்ன?
சென்னை: ஜனவரி 9ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், ஜனவரி 5ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் டிடிவி தினகரனின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக தங்களின் கூட்டணியில் இணையும் கட்சிகளை இறுதி செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிமுக தரப்பில் ஏற்கனவே பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமாகா தலைவர் ஜிகே வாசனும் என்டிஏ கூட்டணியில் தான் இணைவார் என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம்.

ஆனால் பாஜக தரப்பில் என்டிஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பை கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
மறுபக்கம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அண்ணாமலை சந்தித்துவிட்டு, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்து பாஜக அறிவித்தது. அவர் டிசம்பர் 23ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஓபிஎஸ் ஜனவரி 24ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் அமமுகவின் அடுத்தக்கட்ட திட்டம் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ஜனவரி 9ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் சூழலில், அமமுக ஜனவரி 5ஆம் தேதியே அமமுக பொதுக்குழுவை கூட்டி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இதனால் டிடிவி தினகரன் எந்த கூட்டணியில் இடம்பெறுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசி வரும் சூழலில், ஜனவரியில் தவெக கூட்டணி பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications