இதுதான் சொல்லாததையும் செய்வதா? கூட்டாக முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த டிடிவி, அண்ணாமலை.. ஏன்?
சென்னை: ஆவின் நெய் விலையை திமுக அரசு உயர்த்தி உள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்துள்ளனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த 100க்கும் அதிமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் மத்தியில் ஆவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஆவினில் தொடர்ந்து புதிதாக பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது ஆவின் நிறுவனத்தை இன்னும் பிரபலப்படுத்தி வருகிறது.

ஆவின் விலை உயர்வு
இந்நிலையில் தான் சமீபகாலமாக ஆவின் பால் பொருட்களின் விலை என்பது தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளின் விலை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும், நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால் விலையும் உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்டவற்றால் வேறு வழியின்றி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.

ஆவின் நெய் விலை உயர்வு
இதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630ல் இருந்து ரூ.680 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் ரூ.340ல் இருந்து ரூ.365 ஆக கூட்டப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் 3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ. 515 லிருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535 லிருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 3வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் விமர்சனம்
இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆணடில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்க ரூ.115 வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைசசர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா?'' என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சாடிய அண்ணாமலை
இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியத்ன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது. தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக திறனற்ற திமுக அரசு?'' என காட்டமாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications