அதிமுக, பாஜகவுடன் அமமுக "கூட்டணிக்கு ரெடி.." ஆனால் "இதை" செய்யனும்.. டிடிவி தினகரன் அதிரடி!
சென்னை: அதிமுக-பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன், தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன், அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.

ரகசிய பேச்சு வார்த்தை
ஏற்கனவே, டெல்லி பாஜக தலைமை டிடிவி தினகரனுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில்தான் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில், இந்த மாதிரி ஒரு யோசனையை முன் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு திட்டவட்டமாக அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலாவுடன் ஆலோசனை
இன்னொரு பக்கம், பாஜக-அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்களுக்கு அதிமுக ஒதுக்கக்கூடிய தொகுதிகளில் ஒரு சிலவற்றை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில்தான் சென்னை தி.நகர் இல்லத்தில் இன்று சசிகலாவை சேர்ந்த தினகரன் ஆலோசனை நடத்தினார்.

வியூகம்
முன்னதாக நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் எங்களது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு வந்து விடாமல் தடுப்பது மட்டும்தான் ஒரு சில நாட்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் வியூகம் பற்றி தெரிவிக்கப்படும் என்றார்.

ஓரிரு நாட்கள்
அதேநேரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு யூகங்களுக்கு நான் பதில் சொல்லத் தயாரில்லை. எங்கள் தலைமையில் கூட்டணி நிச்சயம் அமையும். இன்னும் ஒரு சில நாட்களில் நாங்கள் என்ன மாதிரி முடிவு எடுத்துள்ளோம் என்பது உறுதியாகத் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி
மேலும், திமுகவை தோற்கடிக்க, விரும்பும் எந்த கட்சியுடனும் அமமுக கூட்டணி வைக்கும் என்கிறீர்களே, அப்படியானால் திமுகவை எதிர்க்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க உங்களுக்கு சம்மதம் என எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர்கள் கேட்டனர், அதற்கு அவர், திமுகவை எதிர்க்கும், எந்த கட்சியாக இருந்தாலும், அமமுக தலைமையை ஏற்று வந்தால் கூட்டணி அமைக்கப்படும் என்றார். அதேநேரம், எங்கள் தலைமையை அதிமுக எப்படி ஏற்கும். அதனால்தான் உங்கள் ஆசைக்காக இப்படி ஒரு பதிலை சொல்கிறேன் என்று குறிப்பிட்டார், டிடிவி தினகரன்.


Click it and Unblock the Notifications
