Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலத்துக்கும் பழியை சுமக்க முடியாது..டிடிவி என்டிஏ பக்கம் ஒதுங்கியது ஏன்? ஆதரவாளர்கள் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்டிஏ கூட்டணிக்குள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்திருப்பது, தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கூட்டணிக்குள் வந்தால் அரசியல் பயணம் எளிதாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தினகரனை, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாஜக எப்படியோ சம்மதிக்க வைத்து என்டிஏ வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்த முடிவின் மூலம் பாஜக தனது அரசியல் இலக்கை அடைந்ததாகக் கருதப்பட்டாலும், டிடிவி தினகரன் தனது தனித்த அடையாளத்தை இழக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அமமுக தனியாகப் போட்டியிட்டு, அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை குறைந்தது 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாதித்தது. சரியாகச் சொல்லபோனால், முக்குலத்தோர் வாக்கு வங்கி வலுவாக இருக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், அதிமுக-வுக்கு கடும் டஃப் கொடுத்தது.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு, கொங்கு சமூகத்தை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒரு சமூகக் கட்சியாக மாற்றிவிட்டார் என்ற பிரச்சாரம், அந்தத் தேர்தலில் அமமுகவுக்கு சாதகமாக அமைந்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

TTV Dhinakaran NDA dmk

டிடிவி தினகரன்

இந்தச் சூழலில்தான், தேவர் சமூகத்தில் கணிசமான ஆதரவு கொண்ட டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை எதிர்ப்பு அரசியலில் இருந்த அமமுக-வும், அதிமுகவும் இன்று ஒரே மேடையில் நிற்பது எவ்வளவு நடைமுறையில் சாத்தியம் என்ற கேள்வி, அமமுக தொண்டர்களிடமிருந்தே எழுந்து வருகிறது.

அமமுக என்டிஏ கூட்டணி

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அமமுக நிர்வாகிகள், தேர்தல் காலத்தில் எதிர் முகாமில் இருந்து கடுமையாக விமர்சித்தவர்கள், இப்போது ஒருவரின் வெற்றிக்காக இன்னொருவர் உயிர் கொடுத்து வேலை செய்வார்களா? தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால், தினகரனுக்கு அமைச்சர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்ற சந்தேகங்களை முன்வைக்கின்றனர். மேலும், கடந்த தேர்தலில் அமமுக பெற்ற 2.3 சதவீத வாக்குகளில், எஸ்டிபிஐ போன்ற சிறு கட்சிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தற்போது பாஜக கூட்டணியில் தினகரன் இடம்பெற்றிருப்பதால், அந்தச் சிறுபான்மையினர் வாக்குகள் இந்த முறை அமமுக பக்கம் திரும்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அமமுகவின் வாக்கு வங்கி

அதேநேரம், அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அமமுகவின் வாக்கு வங்கி குறைந்தபட்சம் உயரலாம், டிடிவி தினகரன் சட்டசபைக்குள் நுழையவும் வாய்ப்பு உள்ளது என்ற மதிப்பீடும் நிலவுகிறது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அமமுக தனது சுய அரசியல் பலத்தை இழந்து, ஒரு இணைப்புக் கட்சியாக சுருங்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர். ஒரு காலத்தில் தினகரனின் அருகில் கைகட்டி நின்ற தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் இன்று திமுகவில் அதிகார மையங்களில் இருப்பதை சுட்டிக்காட்டி, அதே பாதையில் தினகரன் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், அதிமுகவை வீழ்த்தும் அரசியலை ஆடியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டிடிவி தினகரன் முடிவு

இதற்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டை டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் பார்வையில், தினகரன் சட்டசபைக்கு செல்வதும், அமமுக வாக்கு வங்கி உயர்வதும் கட்சிக்கு செல்வாக்கை ஏற்படுத்தும். எஸ்டிபிஐ கூட்டணியில் இருந்ததால் கிடைத்த சில வாக்குகள் இம்முறை கிடைக்காமல் போகலாம். ஆனால், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அதைவிட அதிகமாகவே அமமுகவுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

மேலும், தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோரின் அரசியல் நிலைமை தினகரனுடன் ஒப்பிட முடியாதது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகார வட்டத்துக்குள் இருந்தவர்கள் அல்ல. தனிப்பட்ட சமூக ஆதார வாக்கு வங்கியும் அவர்களுக்கில்லை. ஆனால், டிடிவி தினகரன் அப்படி அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வளர்ந்தவர், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்து அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டவர்.

என்டிஏ கூட்டணி

சமூகம் சார்ந்த வாக்கு வங்கியும், தனிப்பட்ட அரசியல் செல்வாக்கும் அவருக்கு உள்ளது. அதைவிட முக்கியமாக, அவர் தனியாக ஒரு கட்சியை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காலமெல்லாம் எதிர்த்து வந்த திமுக கூட்டணியில் தினகரன் இணைந்திருந்தால், அது அவருக்கு அரசியல் துரோகி என்ற முத்திரையையே ஏற்படுத்தியிருக்கும். திமுகவின் நிழலாக தினகரன் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தியிருக்கும். அதனால், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருப்பது தினகரனின் சரியான அரசியல் முடிவு தான் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+