2006ல் விஜயகாந்த் கொடுத்த தாக்கம்.. 2026ல் மீண்டும் விஜய் ஏற்படுத்துவார்.. டிடிவி தினகரன் கணிப்பு!
தஞ்சாவூர்: 2006 சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை, 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கணித்துள்ளார். இதற்காக தவெகவுடன் கூட்டணி செல்கிறேன் என்று அர்த்தம் கிடையாது என தெளிவுபடுத்திய டிடிவி தினகரன், டிசம்பருக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு வடிவம் பெறும் என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாதக மட்டுமல்லாமல், தவெகவும் ரேஸில் இருப்பது களத்தை கூடுதல் சுவாரஸ்யமாக்கி இருக்கிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது முதலே அக்கட்சியில் அதிகளவில் தொண்டர்கள் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் புதிய வாக்காளர்கள், திமுக மற்றும் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்கள் தவெக பக்கம் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் சில வாக்குகள் வித்தியாசத்தில் கூட வெற்றி, தோல்வி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே தவெகவிற்கு சுமார் 10 சதவிகித வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் கட்சி பற்றி பலரும் பேசுகிறார்கள்.
ஊடகம், அரசியல் விமர்சகர்கள் என்று பேசி வருகிறார்கள். இதனால் தேமுதிகவின் நிறுவனர் மறைந்த விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதுபோன்ற தாக்கத்தை விஜய் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். விஜய்யின் கட்சியால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனது கருத்து யதார்த்தமான ஒன்றுதான். அதற்காக அவருடன் கூட்டணிக்கு செல்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. பல இடங்களில் நண்பர்கள், கருத்துக் கணிப்புகள் மூலம் அறிகிறேன். அதனைத்தான் சொல்கிறேன். அதேபோல் எங்களின் கூட்டணி டிசம்பர் மாதத்திற்கு பின்னரே இறுதி வடிவம் பெறும் என்று தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை தடுத்ததில் அமமுகவின் பங்கு மிகவும் அதிகம். சுமார் 11 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு அமமுக நேரடியாக காரணமாக இருந்தன. இதனால் இந்த சட்டசபைத் தேர்தலில் அமமுகவை தனது தலைமையிலான கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications