செய்தி கேட்டு “ஷாக்” ஆகிட்டேன்.. ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என அவர் கூறி உள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள். 95 வயதான இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து அவர் தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வந்தபோதுபோது கூட ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாருடன் மருத்துவமனையில் இருந்தார்.

ஓபிஎஸ் தாய் மறைவு
தீர்ப்புக்கு பிறகு சென்னைக்கு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கிய நிலையில், மருத்துவமனையில் அவரது தாயாரின் உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் பழனியம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். தாயின் மறைவு செய்தியை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் சோகத்தில் ஆழ்ந்தார். உடனே சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்ட அவர், அங்கிருந்து பெரியகுளத்திற்கு விரைந்தார்.

ஓபிஎஸுக்கு இரங்கல்
தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தாய் பழனியம்மாளின் உடலை பார்த்த பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டு அழுதார். ஓபிஎஸ் தாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இறுதிச்சடங்கு ஏற்பாடுகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வரும் சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல்களை அனுப்பி வருகின்றனர்.

முக ஸ்டாலின் இரங்கல்
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டு இருந்தார்.

டிடிவி தினகரன் இரங்கல்
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதில், "முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications